தள்ளியதை அள்ள தயக்கம் ஏன்?
நகராட்சிக்கு அதிரை மக்கள் கேள்வி !
அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை சீரமைக்கும் பணி தீவிரம் – குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு
அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை சீரமைக்கும் பணியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று களமிறங்கி, பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
குளத்தின் கரையை கட்டமைக்கும் பணிக்காக JCB இயந்திரம் மூலம் மண் வாரியபோது, குளத்திற்குள் அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இதில் 99.9 சதவீத குப்பைகள் நகராட்சி ஊழியர்களால் குளத்திற்குள் தள்ளப்பட்டதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், குளத்தின் தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது வாரி எடுக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் அருகிலுள்ள அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குளத்திலிருந்து அகற்றப்படும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, சுகாதாரமான சூழலை உருவாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.